வெள்ளி, 30 டிசம்பர், 2011

உள்ளமும் உடலும் நலிவுற்றாலும், நித்திரை விழித்து கல்வியில் முத்திரை பதித்துள்ள ஈழத்தமிழினம்

[ வெள்ளிக்கிழமை, 30 டிசெம்பர் 2011 ]
இலங்கை அரசின் அடக்குமுறைக்குட்பட்ட வாழ்வின் மத்தியிலும் இராணுவ நடமாட்டத்தின் நெருக்கடியின் மத்தியிலும் நமது ஈழத்தமிழ் உறவுகளின் வாழ்வியல் அங்கே நகர்ந்து கொண்டிருக்கின்றது.
அந்த அரசியல் உயர் பீடத்தில் அமர்ந்து கொண்டு இந்த மாங்கனித் தீவில் நமது தமிழ் மக்களையும் அவர்தம் வாரிசுகளான இளைய தலைமுறையினர், மாணவ மாணவிகள் ஆகியோரை வதைத்தும் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் கொடுமைக்குள்ளாக்கும் அரசாங்கங்கள் எத்தனையோ ஆண்டுகளாக நடத்தி வரும் அடக்குமுறை ஆட்சிக்கெதிராக முதலில் சாத்வீகப் போராட்டங்களையும் பின்னர் ஆயுதப் போராட்டத்தையும் நடத்திய நமது இனம் அரசியல் ரீதியிலான போராட்டத்தில் மீண்டும் இலங்கையின் கொடிய அரசினால் அடக்கப்பட்டு தனது சுயத்தை இழந்த ஒரு இனமாக அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
பெயரளவில் அங்கு தமிழ் மொழிக்கு சுதந்திரம் என்று சொன்னாலும் தமிழர் பிரதேசங்களில் தமிழ் மொழியிலேயே அரசின் நிர்வாகம் நடைபெறுகின்றது என்று கூறப்பட்டாலும் வடக்கிலும் கிழக்கிலும் ஆளுநர் மற்றும் இராணுவ உயர் பதவிகளில் எல்லாம் பெரும்பான்மை மொழி பேசும் அதிகாரிகளை நியமித்து அவர்கள் மூலம் சிங்கள பெரும்பான்மையினத்தின் அடக்குமுறை வடிவத்தை மறைமுகமாக அறிமுகம் செய்து வருகின்றது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் அநேக பெரும்பான்மை மொழி பேசும் ஊழியர்களை சேவைக்கு அமர்த்தி அதன் மூலம் அவர்களின் பிள்ளைகளோ அன்றி உறவினர்களோ கல்வி கற்பதற்கு வசதியாக தமிழர் பிரதேசங்களில் எல்லாம் சிங்கள பாடசாலைகளை நிறுவி வருகின்ற இந்த அரசாங்கத்தின் கபட நோக்கம் எமது மக்களுக்கு புரியாதது அல்ல.
மறுபக்கத்தில் பெரும்பான்மை இன மக்களின் சமய வழிபாட்டுக்காக என்று சொல்லி  பௌத்த விகாரைகளை தமிழர் பிரதேசங்களில் கட்டி எழுப்பி அவற்றுக்கு அருகே அல்லது உள்ளே பெரிய அளவிலான புத்தர் சிலைகளை எழுப்பி…இவ்வாறாக ஏற்கனவெ தமிழின் மணம் கமழ்ந்த இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளை சிங்களத்தின் சிதறல் காற்று வீசும்படியான முயற்சிகளை இந்த அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகின்றது..
இவ்வாறு மிகவும் மோசமான அடக்கு முறை மற்றும் தமிழ் மாணவர்கள் மீதான கொடிய இராணுவ இம்சைகள், பொருளாதாரத் தடைகள் ஆகியன விடுக்கப்படுதல், ஆயுதங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் மத்தியில் நமது மாணவ மணிகள் அங்கு நித்திரை விழித்து தங்கள் பாடங்களைக் கற்று பொதுப் பரீட்சைகளில் முத்திரை பதித்துள்ளார்கள்.
ஆமாம் நமது மாணவச் செல்வங்கள் பலர் கடந்த வாரம் வெளிவந்த இலங்கை முழுவதற்குமான உயர்தர பரீட்சையில் வெற்றிபெற்றுள்ளனர். அந்த மாணவச் செல்வங்களில் இருவர்
அண்மையில் வெளிவந்த க.பொ.த (உயர் தர) பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்.
உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி மாணவன் செல்வன் கமலவண்ணன் கமலவாசன் அகில இலங்கையிலும் கணிதப் பிரிவில் முதலிடத்தையும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவன் சஞ்சயன் ஆனந்தராஜா விஞ்ஞானப் பிரிவில் இரண்டாவது இடத்தையும் பெற்று ஈழத்தமிழ் மக்களுக்கு புகழையும் அவர்களது பெற்றோர்களுக்கு பெருமையையும் தேடித் தந்துள்ளார்கள்.
இந்த மாணவச் செல்வங்கள் நமது தமிழ் மாணவர்களோடு மட்டும் கல்விப் போட்டிகளில் மோதவில்லை. முழு இலங்கைக்கும் பொதுப் பரீட்சையாக நடத்தப்படும் இதில் கல்வித்துறை சார்ந்த பெரும் வசதிகளைக் கொண்ட நகர்ப்புறத்து சிங்களப் பாடசாலைகளில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களோடு “கல்விப் போட்டிகளில்” மோதியே வெற்றிகளை அடைந்துள்ளார்கள்.
தமிழ் மாணவர்கள் அடைந்த வெற்றி சிங்கள பெற்றோருக்கு மாத்திரமன்றி பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகளுக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை யாழ்;ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வியியல்துறையின் பேராசிரியரும் தற்போது கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் குறுகிய கால பணிக்காக அழைக்கப்பட்டவருமான பேராசிரியர் மா. சின்னத்தம்பி கனடா உதயன் பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதி வந்த யாழ்ப்பாணத்தில் கல்வி என்னும் பெயரிலான கட்டுரைகளின் தொகுதி நூலாக வெளிவந்துள்ளது.
இதன் வெளியீட்டு விழா கனடாவில் நடைபெற்றபோது பல கனடிய அன்பர்கள் கலந்துகொண்டு மேற்படி நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டு நமது தாயகத்தில் வறுமையினால் வாடும் சில மாணவர்களின் கல்விப் பசியை போக்கும் கைங்கரியத்திற்கு உதவிகளை வழங்கிச் சென்றார்கள்.
இதேவேளை கனடாவில் இரண்டு தமிழ் மாணவர்கள் வேற்றின மாணவர்களோடு போட்டியிட்டு கொம்பியூட்டர் விஞ்ஞானத் துறையில் வெற்றிகளை ஈட்டியுள்ளார்கள். கனடாவில் புகழ்பெற்ற ஐபிஎம் நிறுவனம் கனடாவின் பாடசாலைகளுக்கிடையே நடத்திய High School Computer Programming  போட்டியில் ஈழத்தமிழ் மகன் கஜன் இலங்கேஸ்வரன் தலைமையிலான Bramton Fletcher’s Medow உயர் கல்லூரி மாணவர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது.
கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள சுமார் 40 பாடசாலைகள் பங்குபற்றிய மேற்படி போட்டியில் கஜன் இலங்கேஸ்வரன் மற்றும் ஹர்சன் நித்தியானந்தன் ஆகியோர் அடங்கிய குழு வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறாக நவீன கற்றல் வசதிகளைக் கொண்ட மேற்குலக நாடுகளிலும், மறுபக்கத்தில் மிகக்குறைந்த கற்றல் வசதிகளைக் கொண்ட நமது தாயக மண்ணிலும் நமது மாணவச் செல்வங்கள் அடையும் கல்வியியல் வெற்றிகள், நமது எதிர்கால சமூக, கலாச்சார மற்றும் அரசியல் பலத்தையும் ஈட்டித்தரும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போமாக
கனடா உதயன் கதிரோட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக