சனி, 7 ஏப்ரல், 2012

ஒரே ஒரு நபர் மட்டுமே வாழ்ந்த குட்டி நகரம் ஏலம்

அமெரிக்காவில் ஒருவர் மட்டுமே வாழ்ந்து வந்த குட்டி நகரம் ரூ.4.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இதை வியட்னாமை சேர்ந்த கோடீஸ்வரர்கள் 2 பேர் விலைக்கு வாங்கி உள்ளனர்.
அமெரிக்காவின் கொலராடோ அருகில் லாராமி, செயெனி பகுதிக்கு இடையில் உள்ளது பபோர்ட்.
பத்து ஏக்கரில் அமைந்துள்ள இந்த குட்டி நகரத்தில் 3 படுக்கை அறை கொண்ட சொகுசு வீடு, பெட்ரோல் பங்க், சில சிறிய வீடுகள் உள்ளன.
இங்கு வசித்தவர் டான் சம்மன்ஸ். இவர் ஒருவர் மட்டும் தான் இந்த நகரில் வசித்தார். அதனால் அமெரிக்காவிலேயே மிகமிக குறைந்த மக்கள்தொகை கொண்ட நகரம் என்று பெயர் பெற்றது.
கடந்த 1980ம் ஆண்டு இந்த நகரத்துக்கு மனைவி, மகனுடன் சம்மன்ஸ் குடியேறினார். 1990ம் ஆண்டில் நகரத்தை விலைக்கே வாங்கி விட்டார். கடந்த 1995ம் ஆண்டு இவரது மனைவி இறந்துவிட்டார்.
அதன்பின் 2007ம் ஆண்டு மகனும் வேறு இடத்துக்கு சென்று விட்டார். ஆனால் நகரை பிரிய மனமில்லாத சம்மன்ஸ் அங்கேயே வசித்தார். அதன்பின் நகருக்கு வருபவர்களுக்கு பீர், உணவு, தங்கும் வசதிகள் செய்து கொடுத்து வருவாய் ஈட்டினார்.
இந்நிலையில் நகரை ஏலத்தில் விட சமீபத்தில் முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை செயெனி நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் டான்ஜா ஆண்ட்ரூஸ் செய்தார்.
2012ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதியன்று நகரம் ஏலம் விடப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஓன்லைனில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
அதன்படி பபோர்ட் நகரம் நேற்று ஏலம் விடப்பட்டது. 12 பேர் பங்கேற்றனர். முதலில் ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் ஏலத் தொகை கிடுகிடுவென உயர்ந்தது.
கடைசியில் ரூ.4.5 கோடிக்கு ஏலம் முடிந்தது. வியட்னாமை சேர்ந்த 2 கோடீஸ்வரர்கள் நகரை ஏலம் எடுத்தனர். ஏலம் முடிந்தவுடன், அந்த 2 பேரையும் டான்ஜா அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டார். மீடியாவிடம் பேச அவர்களை அனுமதிக்கவில்லை. அதனால் ஏலம் எடுத்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
ஏலம் குறித்து டாம் சம்மன்ஸ் கூறுகையில், என் பாதி வாழ்நாளை இந்த நகரத்தில் கழித்துவிட்டேன். இப்போது நகரை விட்டு பிரிவது வருத்தமாக இருக்கிறது. மகன் வசிக்கும் இடத்துக்கு அருகில் வாடகைக்கு வீடு பார்ப்பேன் என்கிறார்.
கடந்த 1980ம் ஆண்டில் இருந்து இதுவரை பபோர்ட் நகரில் கிடைத்த அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட திட்டமிட்டுள்ளார் சம்மன்ஸ்.
பபோர்ட் நகரத்தை 2 பேர் விலைக்கு வாங்கியதால், இதன் மக்கள் தொகை இப்போது இரண்டு மடங்காகி விட்டதாம். அதனால் அமெரிக்காவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட நகரம் என்ற பெருமையை பபோர்ட் இழந்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக