ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

மிகத்திறமையான கல்லூரி மாணவியை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன்!- அப்துல் கலாம்

நான் யாழ்ப்பாணத்துக்கு(25.01.2012) சென்று இந்துக் கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடிய போது மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்யவேண்டும் என என்னிடம் கேள்வியெழுப்பினார். அவ்வாறு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது என்று இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் தெரிவித்தார். அம்மாணவி தொடுத்த வினாவிற்கு பதிலளித்த நான் அந்த பதிலைத் திருப்பிக் கூறுமாறு தெரிவித்தேன். உடனடியாக அவர் அதனை திருப்பிக்கூறினார். அவ்வாறு மிகத் திறமையான மாணவியை நான் சந்தித்தது யாழ்ப்பாணத்தில் தான் என்று இந்திய டாக்டர். அப்துல் கலாம் தெரிவித்தார். கொழும்பில் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அப்துல் கலாம், தான் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் இந்துக் கல்லூரியில் சந்தித்து உரையாடிய மாணவர்களின் திறமை தொடர்பாகவும் புகழாரம் சூட்டினார். நேற்று முன்தினம் காலை இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த அப்துல் கலாமிடம் ஆறு மாணவ மாணவிகள் கேள்விகளை எழுப்பினர். அதில் சிறு மாணவன் ஒருவன் ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தமையையிட்டு நான் மிகவும் பெருமையடைகின்றேன். உங்களைப் போன்று நானும் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என வினவினான். அந்த மாணவனது இந்தத் திடீர் வினா சபையார் அனைவரையும் கவர்ந்ததுடன் பலரது கரகோசத்தையும் பெற்றது. அதற்கு பதிலளித்த அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் இலட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார். இதேவேளை மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்ய வேண்டும் என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கலாம், உனது இதயத்தில் நேர்மை இருந்தால் உனது செயலில் அழகு இருக்கும். செயலில் அழகு இருந்தால் வீட்டில் அமைதி இருக்கும். வீட்டில் அமைதி இருந்தால் நாட்டில் அமைதி இருக்கும். நாட்டில் அமைதியிருந்தால் உலகில் சமாதானம் இருக்கும் என ஆங்கிலத்தில் அவர் கூறியதை அப்படியே குறித்த மாணவி திருப்பிக் கூறியதை டாக்டர் கலாம் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக