புதன், 31 ஆகஸ்ட், 2011

ஏராளமானோர் புடைசூழ ஊர்வலமாகச் சென்ற செங்கொடியின் சடலம்: தலைவர்கள் அஞ்சலி

ஏராளமானோர் புடைசூழ ஊர்வலமாகச் சென்ற செங்கொடியின் சடலம்: தலைவர்கள் அஞ்சலி தூக்கு தண்டனையை தடுக்கக்கோரி தீ குளித்து இறந்த இளம்பெண் செங்கொடியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஊர்வலமாக அவரது சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ராஜிவ் கொலையில் 3 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்யக்கோரி காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்தார். மரணத்துக்கு காரணமாக அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. செய்தி அறிந்து ஏராளமானோர் திரண்டு வந்து கதறி அழுதனர்.

நள்ளிரவில் அங்கு வந்த மதிமுக தலைவர் வைகோ, நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சீமான், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்டோர் செங்கொடி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நேற்று உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டது. காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அலுவலர் வீரப்பன், எஸ்.பி. மனோகரன் அங்கு வந்தனர்.

அவர்களிடம், பொது மக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக பொது இடம் ஒதுக்க மக்கள் மன்றத்தினர் அனுமதி கோரினர். அதற்கு அவர்கள், மறுப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதையடுத்து செங்கொடி உடல் ஏற்றப்பட்ட வாகனம் ஏராளமானோர் புடைசூழ மதியம் 1 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம் இரவு 7 மணிக்கு கீழ்கதிர்ப்பூர் கிராமத்திற்கு சென்றது. அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. செங்கொடியின் இறுதி சடங்கு நாளை மாலை 4 மணிக்கு நடக்கிறது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக