புதன், 31 ஆகஸ்ட், 2011

தூக்குத் தண்டனையை இரண்டு மாதங்கள் நிறுத்தி வைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான  மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது, தூக்குத் தண்டனையை எட்டு வாரங்கள் நிறுத்திவைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை செப்டம்பர் 9ம் தேதி தூக்கிலிடுமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து தமிழகமெங்கும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
மேலும், தூக்குதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மூவரின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து வருகிறது.
மனுதாரர்கள் சார்பில் டெல்லியை சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, மும்பை மூத்த வக்கீல்கள் மோகீத் சவுத்ரி, காலின் சால்வேல்ஸ் ஆகியோர் ஆஜராகினர்.
துரைசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வைகோ, அற்புதம்மாள் மற்றும் பல தமிழ் ஆர்வலர்களும் நீதிமன்றில் குழுமினர்.

மனு மீதான விசாரணையில், மூவரின் தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூக்கில் போட தடை விதிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கொண்டாடினர். மேலும், தூக்குக்கு எதிராக தமிழகமெங்கும் போராடியோர் பட்டாசுகள் கொளுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக