திங்கள், 3 அக்டோபர், 2011

சிறீலங்காவில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெகுவிரைவில் வரும்!– கனடியப் பா.உ. பற்றிக் பிறவுண்

[ திங்கட்கிழமை, 03 ஒக்ரோபர் 2011, 05:35.38 AM GMT ]
உலகின் பழமைவாதம் தழுவிய ஆட்சியாளர்கள் சுதந்திரத்தின் [freedom]  பக்கம் திரும்புகின்றனர் என்பதையே நாம் கண்டு கொண்டிருக்கிறோம் என கன்சவேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுண் கனடிய மனிதவுரிமை மையத்துடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.
கனடியப் பாராளுமன்றத்தில் மனிதவுரிமை கண்காணிப்பகத்துடன் இணைந்து கொலைக்களம் விவரணத்தை திரையிட்டவரும், 2009ல் சிறீலங்காவிற்கு விஜயம் செய்ய முயன்ற வேளை விசா மறுக்கப்பட்டவருமான பற்றிக் பிரவுண் தான் இந்த முயற்சிகளின் போது சந்தித்த நெருக்கடிகளையும் கனடிய மனிதவுரிமை மையத்துடன் பகிர்ந்து கொண்டார்.
2009ல் சிறீலங்காவிற்கு விஜயம் செய்ய தான் முயன்றதில் இருந்து சிறீலங்கா வரம்பு மீறிய அளவிலான அழுத்ததைத் தனக்குப் பிரயோகித்த போதும் தான் இந்த விவகாரத்தில் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும் இச் சந்திப்பின் போது குறிப்பிட்ட பற்றிக் பிரவுண் இந்த முறையும் தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமளிவிற்கான மிரட்டல்களை சிறீலங்காவின் தூதரகம் தன் மீது திணித்ததாகத் தெரிவித்தார்.
சிறீலங்கா அரசாங்கமானது ஏதோ ஒன்றை மறைப்பதால் தான் இவ்வாறு தனக்கு மிரட்டல்களை விடுகிறது என்பதையும், இந்த சர்வாதிகர அரசு இதனால் தான் தனக்கு மிரட்டல்களைத் தருகிறது என்பதையும் தான் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளதாகவும் பற்றிக் பிரவுண் அவர்கள் தெரிவித்தார்.
கனடிய மனிதவுரிமை மையத்துடனான இச் சந்திப்பில் அதன் தலைவர் பாபு நாகலிங்கம், இயக்குனர் ராஜ் சுப்பிரமணியம் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர். அதன் போது கனடிய அரசிற்கும் தமிழ்மக்களிற்குமான உறவுப் பாலமாக பற்றிக் பிரவுண் இருப்பதையிட்டு தாம் பெருமை கொள்வதாக மேற்படி அணியினர் தெரிவித்தனர்.
தான் சார்ந்திருந்தும் கன்சவேட்டிவ் கட்சி சிறீலங்கா விவகாரத்தில் மிகவும் அழுத்தமான நடவடிக்கைகளை எடுப்பதையிட்டு தான் மிகவும் சந்தோசமடைவதாகவும், பிரதமர் காப்பர் மனிதவுரிமை விவகாரத்தில் முன்னேற்றம் காணாவிட்டால் தான் 2013ம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தது மிகவும் சக்திவாய்ந்த ஒரு எச்சரிக்கை என்று தான் கருதுவதாகவும் பற்றிக் பிரவுண் தெரிவித்தார்.
வரலாறு மீண்டும் சுழன்று ஜனநாயகத்தின் பக்கம் வருகிறது என்றும், சிறீலங்காவிலும் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெகுவிரைவில் வரும் எனவும், கனடா எப்போதும் மனிவுரிமையின்,  சுதந்திரத்தின் குரலாக,  அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நண்பனாக இருக்கும் என்றும் பற்றிக் பிரவுன் கனடிய மனிதவுரிமை மையத்திடம் [www.chrv.ca] தெரிவித்தார்.
தான் பாராளுமன்றத்தில் நடத்திய கொலைக்களம் காணொளி திரையீட்டிற்கு தனக்கு உதவிய தனது நண்பரும் சமூகசேவகருமான திரு. ஆரன் சுரேஸ்குமாருக்கு பற்றிக் பிரவுண் தனது நன்றியறிதலைத் தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக