ஞாயிறு, 9 அக்டோபர், 2011

சிறிலங்காவின் புதிய இலத்திரனியல் நுழைவிசைவு - பயணமுகவர்கள் அதிருப்தி

எதிர்வரும் 2012ம் ஆண்டு ஜனவரி முதலாம் நாளிலிருந்து சிறிலங்காவிற்குள் நுழைபவர்களிடம் 50 டொலர்களை கட்டணமாக அறவிடுவதென்கின்ற சிறிலங்கா அரசின் தீர்மானத்தால் இதனுடன் தொடர்புபட்டவர்கள் பலரும் சவாலை எதிர்நோக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய இலத்திரனியல் பயண அங்கீகாரத்துவமானது [Electronic Travel Authorization - ETA] இலவச நுழைவிசைவு முறைமைக்குப் பதிலாக அறிமுகமாவதுடன், இது இணையத்தின் ஊடாகவே பெறப்படவேண்டும் எனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே விமானப் பயணிகளுக்கான தீர்வையை வழங்குகின்ற பிரிட்டன் பயணிகள் இவ்வாறு 50 டொலர்களைச் செலுத்தவதானது அவர்களை மிகவும் பாதிக்கும் என இதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் மற்றும் முகவர்கள் நம்புகின்ற அதேவேளையில், சிறிலங்காவின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் நபீல் சரீப் இதனை ஆதரித்துள்ளார்.

"நாங்கள் இது தொடர்பாகக் கவனத்தில் எடுத்துள்ளோம். ஆனால் இத்திட்டமானது எல்லாச் சந்தைகளுக்கும் பொதுவானதாகும். பிரிட்டன் போன்று எல்லாச் சந்தைகளின் நிலைப்பாடுகளும் ஒரேவிதமாக அமைந்திருக்காது. இந்தியா அல்லது சீனாவிற்குச் செலுத்துகின்ற கட்டணங்களை விட இது கொஞ்சம் குறைவானதாகும். பிரிட்டனின் பக்கமிருந்து பார்க்கும் போது இது கொஞ்சம் கடினமானதாகவே அமைந்திருக்கும். ஆனால் நாங்கள் நாடுகளுக்கிடையில் பாரபட்சத்தைக் காண்பிக்க விரும்பவில்லை" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்புதிய திட்டமானது நாட்டிற்குள் வருபவர்களைக் கண்காணிப்பதற்கு உதவும் எனவும் அவர் தெரிவித்தார். "சிறிலங்கா அரசா ங்கமானது நாட்டிற்குள் வருகின்ற சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்க விரும்புகின்றது. தற்போது நடைமுறையிலுள்ள முறைமையானது பழமை வாய்ந்ததாகும். நாட்டிற்குள் யார் வருகின்றார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கான வழிமுறைகள் இதில் காணப்படவில்லை" எனவும் நபீல் சரீப் தெரிவித்தார்.

"தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள நுழைவிசைவு அனுமதி தொடர்பாக பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், இதில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவின் சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்புபட்ட செயற்பாட்டாளர்களுக்கு இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை" என ஆசியாவிற்கான ஆராய்ச்சி செயற்பாட்டு முகாமையாளர் லூசி நிக்கோல் தெரிவித்துள்ளார்.

"கடந்த காலங்களில் இவ்வாறான மாற்றங்கள் மேற்கொள்ளும் போது சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட பணியாளர்கள் இவற்றை எதிர்த்ததாகவும், அதேபோன்று தற்போது ஏற்படுத்தப்படவுள்ள மாற்றத்திற்கும் அவர்களிடமிருந்து சவால்களை எதிர்நோக்க வேண்டி வரலாம்" எனவும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

"சிறிலங்காவின் வர்த்தகச் செயற்பாடுகளை இது பாதிக்கும் என நான் நினைக்கிறேன். இருவருக்கு 100 டொலர்களை அல்லது குடும்பம் ஒன்றிற்கு 200 டொலர்களைச் செலுத்துவது தொடர்பாக மக்கள் பல தடவைகள் சிந்தித்தே முடிவை எடுக்க வேண்டியுள்ளது" என Clapham ஐத் தளமாகக் கொண்டியங்கும் பயண நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் நிக் மக்கே தெரிவித்துள்ளார்.

2012 ல் சிறிலங்காவிற்கு வருவதற்காக பதிவுகளை மேற்கொண்டவர்களுடன் பயண முகவர்கள் தொடர்பு கொண்டு இம்மாற்றம் தொடர்பாக அவர்களிடம் எடுத்துரைத்து இணையத்தின் ஊடாக இதற்கான கட்டணத்தைச் செலுத்துமாறு அவர்களிடம் கோர வேண்டும் எனவும் சரீப் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் போக்குவரத்து அங்கீகாரத்துவ முறைமையின் கீழ் கடவுச்சீட்டின் பிரதிகளோ அல்லது ஒளிப்படங்களோ தேவையில்லை எனவும், இது வழங்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று மாதங்கள் வரை செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைவழி போக்குவரத்துப் பிரயாணிகளுக்கான கட்டணமாக 25 பவுண்ட்ஸ் செலுத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக